BREAKING NEWS
latest

Tuesday, August 21, 2018

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சமரசம் - 52 கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு


வெலிக்கடை சிறைச்சாலையில் சில பெண் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலை நேற்று இரவு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 52 பெண் கைதிகளும் வெலிகடை சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெண் கைதிகள் சிலர் நேற்று பிற்பகல் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ஒரு வாரத்திற்குள் வெலிகடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 13 ஆம் திகதி பெண் கைதிகள் சிலர் வழக்குகள் தாமதமடைவதாகவும், உரிய வசதிகளை பெற்று தருமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் இரண்டு நாட்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பின்னர் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும் அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகள் சிலர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் தாக்கியதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஸார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதன்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும், 3 கைதிகளும் காயமடைந்த நிலையில் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளால் கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டி, சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு நேற்றைய தினம் பொரளை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளது
« PREV
NEXT »

Facebook Comments APPID