BREAKING NEWS
latest

Tuesday, July 24, 2018

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்' உருவானது!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை சர்வதேச ரீதியில் கொண்டு செல்லும் நோக்கில், வலிந்து 'காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்' உருவாக்கப்பட்டிருப்பதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தமது போராட்டம் சங்கமாக மாறியமை போராட்டத்தை நலிவடையச் செய்யும் செயற்பாடு அல்ல. மாறாக போராட்டத்தை சர்வதேச ரீதியில் கொண்டு செல்லும் நோக்கில் அதன் வடிவம் மாற்றப்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.

யுத்தத்தின் போது காணாமல்போனவர்களின் உறவுகள் கடந்த 500 நாட்களுக்கு மேலாக வீதியில் இருந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றையதினம் முல்லைத்தீவில் உள்ள காணாமல்போனோரின் உறவுகள் சங்க காரியாலயமொன்றை திறந்துவைத்தனர். மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் இந்த அலுவலகம் நேற்றுக் காலை 10 மணிக்குத் திறந்து வைக்கப்பட்டது.

பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள் உள்ளிட்ட பல காணாமல்போனவர்கள் தொடர்பில் நீதி வேண்டி இலங்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே போராட்டங்களை ஆரம்பித்திருந்தோம். இதனால் வீதிகளுக்கு அருகில் கொட்டகைகளை அமைத்து போராட்டத்தை முன்னெடுத்தோம். போராட்ட காரரர்களை ஜனாதிபதி இரண்டுற்கும் மேற்பட்ட தடவைகள் சந்தித்துள்ளபோதும் எந்த பதிலையும் வழங்கவில்லை. அது மாத்திரமன்றி காணாமல்போனோரின் உறவுகளின் பிரதிநிதிகள் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை ஒலிக்கச் செய்தனர்.

அங்கு கிடைத்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டத்தை அடுத்தக்கட்டமாக சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் உருவாக்கப்பட்டு அதற்காக அலுவலகமொன்றும் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் தெரிவித்தனர்.

இந்த அலுவலகம் திறக்கப்பட்டது போராட்டத்தை நலிவடையச் செய்யும் நோக்கில் அல்ல. சர்வதேச ரீதியில் எமது முறைப்பாடுகளைப் பதிவுசெய்து அவற்றுக்கு நீதி கோரும் போராட்டமாகத் தொடரும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த அலுவலகத்தில் காணாமல்போனோரின் உருவப்படங்கள் ஒட்டப்பட்டு அவர்களின் விபரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
« PREV
NEXT »

Facebook Comments APPID