BREAKING NEWS
latest

Monday, July 23, 2018

கண்ணீரின் கதைகள்!


போருக்குப் போனவரோ
ஊர் திரும்பவில்லை – அவர்
போனதிசை தானறிய
ஓர் துரும்புமில்லை.

யாருக்குத் தான் புரியும்
எங்கள் வேதனை – இனி
யாருக்கும் வரவேண்டாமே
இந்தச் சோதனை.

ஊருக்குள் ஓநாய்கள்
உலவுகின்றது – எம்மை
உருக்குலைக்கத் தெருவோரம்
உளவு பார்க்குது.

நேருக்கு நேர்நின்று
புலம்பிப் போகுது – சில
நரிக்கூட்டம் நம்வாழ்வில்
நுழையப் பார்க்குது.

பாருக்குள் பெருந்தலைவன்
பெயர் மறைந்ததால் – சில
பேருக்குள் பெருவீரம்
உருவெடுக்குது.

ஊருக்குள் உத்தமர்போல்
தம்மைக் காட்டுவார் – உதவி
தருவார் போல் தேடிவந்து
தெம்பு ஏற்றுவார்.

பகலெல்லாம் பணியென்று
கதையைக் கட்டுவார் – பின்
இரவானால் இரைதேடக்
கதவு தட்டுவார்.

வேலைதேடிப் போவதற்கும்
வேலியில்லையே! – வரும்
சோலிதனைத் தீர்க்கக்கூடத்
தாலியில்லையே!!.

சொந்தத் தொழில் தேடினாலும்
சொடிப்புக் கதைகள் – நாங்கள்
எந்தத்தொழில் தேடினாலும்
சித்திர வதைகள்.

விட்டுப்போன வாழ்வையெண்ணி
நாளும் தவிக்கிறோம் – நாங்கள்
கெட்டுப்போயிடாமல் இன்னும்
காத்துக் கிடக்கிறோம்.

வாழ்விழந்த பெண்களெனில்
வேசிக் கூட்டமோ?, – ஊர்
பார்வையிலே நாங்களென்ன
தாசிக் கூட்டமோ?.

பிள்ளையுறவுக்காக வேண்டி
உயிரைச் சுமக்கிறோம் – எந்தத்
தொல்லை வந்த போதுமதை
துணிந்து சகிக்கிறோம்.

விடுதலைக்காய் விலைகொடுத்து
விதவையாகினோம் – ஈழ
விடியலுக்காய் வாழ்விழந்து
தெருவில் நிற்கிறோம்.

உங்களுக்ளாய் எங்கள் வாழ்வை
இழந்து நிற்கிறோம் – மண்ணில்
எங்களையும் வாழவிடுங்கள்
இரந்து கேட்கிறோம்.

காவலுக்காய் களத்தில் நின்ற
காவலர் நாங்கள் – தேசக்
கடமையாக எம்மைக் காக்கக்
காவலைத் தாங்கள்.
– நன்றி –
வன்னியூர்- வரன்

« PREV
NEXT »

Facebook Comments APPID