BREAKING NEWS
latest

Monday, July 23, 2018

கறுப்பு யூலையை விட இன்று தமிழ் – சிங்கள பகை பல மடங்கு அதிகரித்துள்ளது!

கறுப்பு யூலை அரங்கேற்றப்பட்டு 35வது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் எமது மக்களின் அல்லல்கள், அவலங்கள் தொடர்கின்றன. அதன் வடுக்கள், வலிகள் ஒரு முடிவுக்கு வருவதாக இல்லை. ஆண்டில் உள்ள எல்லா மாதங்களுமே இன்று கறுப்பு மாதங்களாகி விட்டன.

ஈழப் போர் 4 முடிந்து  விடியலுக்கான அறிகுறிகள் தொடுவானத்துக்கு அப்பாலும் காண முடியவில்லை.
கறுப்பு யூலையை இனக் கலவரம் என்று பலர் அழைக்கிறார்கள். இது தவறான சொல்லாட்சி ஆகும். காரணம் கலவரம் என்றால் சிங்களவரும் தமிழரும் மோதிக் கொண்டார்கள், சண்டை பிடித்தார்கள் எனப் பொருள்படும். ஆனால் கறுப்பு யூலை ஆயுதம் கையில் இல்லாத தமிழர்களை ஆயுதபாணிகளான சிங்களக் காடையர்கள் தாக்கி இனப் படுகொலை செய்த மாதமாகும்.

கறுப்பு யூலை இனப்படுகொலை என்பது யாழ்ப்பாணத்தில் 13 படையினர் வி.புலிகளால் கொல்லப்பட்டதற்கு சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்வினை எனச் சொல்லப்பட்டாலும் இந்தப் படுகொலை முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட வெறியாட்டம் ஆகும். சிங்களக் காடையர்கள் இலங்கை முழுதும் வீதிகளில் இறங்கித் தமிழர்களை ஆயுதங்களால் தாக்கிக் கொன்றார்கள். அவர்களது சொத்துக்களை தீயிட்டுக் கொளுத்தினார்கள். அல்லது கொள்ளை அடித்தார்கள்.

தேர்தல் இடாப்புகளைக் கையில் வைத்துக் கொண்டு மஞ்சள் அங்கி அணிந்த பவுத்த பிக்குகள் தமிழர்களது வீடுகளையும் அங்காடிகளையும் இனம் காட்ட சிங்களக் காடையர்கள் அவற்றச் சூறையாடிவிட்டுக் கொளுத்தினார்கள்.

அதிவுயர் பாதுகாப்பு வெலிக்கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையைச் செய்த எவரும் இதுவரையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.

யூலை 23, 1983 அன்று 35 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் யூலை 28 இல் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த இனப் படுகொலையை நினைவு கூறுவதன் நோக்கத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இனப் படுகொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதையும் அப்படியான இனப் படுகொலை 1983 க்குப் பின்னரும் தொடர்கிறது என்பதையும் நாம் பன்னாட்டு சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும். ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் பாசீச முகத்தை அவர்களுக்குத் தோலுரித்திக் காட்ட வேண்டும்.

1983 கறுப்பு யூலையின் போது கொலை, வெட்டு, தீ வைப்பு, கத்திக் குத்து இடம்பெற்றன. கொலைக்குக் கத்திகள், பொல்லுகள், துப்பாக்கிகள், கைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. நானூற்றுக்கும் – 3000 க்கும் இடையிலான மக்கள் கொல்லப்பட்டார்கள். இருபத்தாயிரம் மக்கள் காயப்பட்டார்கள்.

கறுப்பு யூலை இனப் படுகொலையே சிங்கள – தமிழ் மக்கள் இடையிலான இனச் சிக்கல் ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமாக இருந்தது.

1983 இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்களாலும் சிங்களப் படையினராலும் நடத்தப்பட்ட கொலைவெறி ஆட்டத்துக்கு அஞ்சி தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடித் தஞ்சம் அடைந்த 150,000 மக்கள் இன்றும் நாடு திரும்ப முடியாது அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். நாடு திரும்பித் தங்கள் சொந்த வீடுவாசல்களில் மீள்குடியமருவதற்கு வேண்டிய சூழலை உருவாக்கிக் கொடுக்க சிறீலங்கா அரசு மறுத்துவருகிறது. அவர்களைப் பற்றிச் சிறிதேனும் அரசு அக்கறை காட்டுவதாக இல்லை.

கனடாவிற்கு ஓடிவந்து அரசியல் தஞ்சம் புகுந்தவர்களில் பலர் இன்று தாங்கள் பிறந்த மண்ணையும் மக்களையும் வேகமாக மறந்து வருகிறார்கள். சிலர் மறந்தே விட்டார்கள். அங்கே எமது உடன்பிறப்புக்கள் ஒரு நேர உணவுக்கு அல்லாடும் போது இங்கே கனடியத் தமிழர்கள் ஆடம்பரத் திருமணங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தேர், திருவிழா போன்றவற்றில் பணத்தைப் பல்லாயிரக் கணக்கில் செலவழித்துப் பாடுபட்டு உழைத்த பணத்தை வறிதே வீணாக்குகிறார்கள். இன்னும் சிலர் மலிவான பொழுது போக்குக்காக மிகுந்த பொருட் செலவில் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், பாடகர்களை வரவழைத்து தமிழர்களது பணம் கொள்ளை போக வழி சமைக்கிறார்கள்.

தமிழரின் தாயகமான வட கிழக்கில் 89,000 கும் மேலான குடும்பத் தலைவனை இழந்த தாய்மார்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். தாயை அல்லது தந்தையை அல்லது தாய் தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள் ஆயிரக் கணக்கில் வட – தென் தமிழீழத்தில் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிறு பகுதியினரை மட்டும் சாரதா இல்லம், அன்பு இல்லம், செஞ்சோலை, விபுலானந்தர் இல்லம், குருகுலம், காந்தி நிலையம் போன்ற இல்லங்கள் காப்பாற்றி வருகின்றன.
கொடை உள்ளம் படைத்த கனடிய தமிழர்கள் கைம்

பெண்களின் மறுவாழ்வுக்கும் சிறார்களின் பராமரிப்புக்கும் பொருள் உதவி செய்து வருகிறார்கள்.
போரினால் இடம் பெயர்ந்த மக்களில் அண்ணளவாக 93,000 பேர் இன்னமும் மீள் குடியமர்த்தப்படவில்லை.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 44 ஆயிரத்து 559 பேர் தொடர்ந்தும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் நலன்புரி அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர்கள் அனைவரும் 12 ஆயிரத்து 459 குடும்பங்களை சேர்ந்தவர்களாவர். இவர்களில் பெரும்பாலானோர் 53 நலன்புரி நிலையங்களினிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கில் மட்டும் 1990 இல் இராணுவத்தினால் வெளியேற்றப்பட்ட தென்மூலை, வடமூலை, கரம்பக்கடவை, குடியிருப்பு, மாரிசிட்டி, வசாவிளான் சந்தி, தோலகட்டி போன்ற கிராமங்கள் உட்பட சுமார் 28 கிராமசேவகர் பிரிவுகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்பட்டட மக்கள் தனியார் நிலங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். மொத்தம் 7,800 குடும்பங்களைச் சேர்ந்த 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தக் கிராமங்களில் இருந்த தமிழ்மக்களது வீடுகள் பாதுகாப்புப் படையினரால் புல் டோஸர் கொண்டு தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன.

மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக வலிகாமம் வடக்கில் 6,381 ஏக்கர் 38.97 பரப்பு (மொத்தம் 1, 021, 52 பரப்பு) நிலப் பரப்பை சுவீகரிப்பதற்கு காணி சட்டம் பிரிவு 2 இன் கீழ் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 25.8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு, கொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஒப்பானது!

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் இராணுவம் இராணுவக் குடியிருப்புக்கள், உல்லாச விடுதிகள், ஹோட்டல்கள், விகாரைகள், புத்தர் சிலைகள், விளையாட்டுத் திடல் போன்றவற்றை நிறுவியுள்ளது. அவற்றை தென்னிலங்கை சிங்கள உல்லாசப் பயணிகள் சென்று தரிசித்துப் போகிறார்கள்.

வலிகாமம் வடக்கு சீராவலை பகுதியில் உள்ள 15 ஏக்கர் காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்து 513 ஆவது பாரிய படைமுகாம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுவீகரிக்கப்பட உள்ள நிலப்பரப்பு உப உணவுப் பயிர்களின் உற்பத்திக்கு மிகச் சிறந்த நிலமாகும். இந்தப் பகுதி மக்கள் கடந்த காலங்களில் தமது நிலத்தில் பயிர் செய்ததன் மூலம் மாதாந்தம் கணிசமான வருவாயைப் பெற்று வந்தனர். இப்போது இராணுவம் காய், கறித் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு அதில் வரும் காய், கறிகளை தமிழர்களுக்கு விற்று இலாபம் ஈட்டுகிறது!

இதே பகுதியில்தான் மிகச் சிறந்த மயிலட்டி மீன்பிடிக் கிராமம் அமைந்துள்ளது. கடந்த 23 ஆண்டு காலமாக அவர்களது வருமானம் தடுக்கப் பட்டுள்ளது. அவர்களது சொத்துக்களைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும் அரசு அவர்களுக்கு வாடகைகூடக் கொடுக்க வில்லை.

காணி அபகரிப்புக்கு எதிராக இராணுவ அச்சுறுத்தல், கெடுபிடி, நெருக்குவாரம் போன்றவற்றின் மத்தியிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் வாழ்வாதாரப் போராட்டங்களையும் மக்கள் செய்தார்கள். உண்ணா நோன்பு இருந்தார்கள். ஆனால் அரசு அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. அரசு காணிகளைச் சுவீகரிப்பதில்தான் தீவிரமாக இருக்கிறது.

சிங்கள இனவாத அரசுக்குப் பல்லக்குத் தூக்கும் தமிழ் அடிவருடிகளும் கைக்கூலிகளும் தமிழர்களது வீடுவாசல்கள் பறிபோவதைக் கண்டு கொள்ளவே இல்லை.

நாடாளும் சனாதிபதி மகிந்த இராபச்சே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார். போரில் வெற்றி பெற்ற மிதப்பில் இருந்து இன்னமும் மீளாத அவர் காணி, காவல்துளற அதிகாரங்கள் யாருக்குத் தேவை என கேள்வி எழுப்புகிறார்.

‘பயங்கரவாதத்தின் கொடூரத்தை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அடக்குமுறைக்கு உள்ளானவர்களே நன்கு அறிவார்கள். ஏனைய மாகாணங்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இது பற்றித்தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வடக்கு கிழக்கு மக்கள் காணி, காவல்துறை அதிகாரங்களையோ அல்லது தனி இராச்சியத்தையோ கோரவில்லை. மக்கள், அரசாங்கத்தினால் நாட்டு மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய சேவை ஆற்றப்படுகின்றதா என்பதனையே கருத்திற் கொண்டனர். காணி காவல்துறை அதிகாரங்கள் பற்றிக் கவலைப்பட்டதில்லை. மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிய மோசமான வரலாற்றுக்கு இந்த அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது. பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததனைப் போன்றே, பொருளாதார பின்னடைவுகளிலிருந்தும் நாட்டை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என ரம்புக்கன்ஓய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மகிந்த இராசபக்சே திருவாய் மலர்ந்துள்ளார்.

மகிந்த இராசபக்சே எந்த உலகில் இருக்கிறார் என்பது புரியவில்லை. தமிழ்மக்கள் உண்மையில் காணி, காவல்துறை அதிகாரங்களையோ அல்லது தனி இராச்சியத்தையோ கோரவில்லை என்றால் வடக்கில் மட்டும் 150,000 சிங்கள இராணுவத்தினர் குடியமர்த்தப்பட்டு பாரிய இராணுவ மற்றும் கடற்படைத் தளங்கள் நிறுவப்படுவது ஏன்? தமிழ்மக்களுக்குச் சொந்தமான 6,382 ஏக்கர் காணி கையகப்படுத்துவது ஏன்?

உண்மை என்னவென்றால் தமிழ்மக்கள் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத ஒரு இராணுவ கொடுங்கோல் ஆட்சியில் அகப்பட்டு மூச்சுவிட முடியாத நெருக்கடிக்குள் வாழ்கிறார்கள். புலிகள் அல்ல பயங்கரவாதிகள் சிங்கள இராணுவமே தம்மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதாக தமிழ்மக்கள் முறைப்படுகிறார்கள். அவர்களது அடிப்படை சுதந்திரங்கள் பறிக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதாக எண்ணுகிறார்கள்.

இந்த அழகில் வட மாகாண சபைத் தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறு மகிந்த இராசபக்சே எந்த முகத்துடன் தமிழ்மக்களைக் கேட்கப் போகிறார்?

தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களில், ஆண்டாண்டு காலமதாய் அவர்கள் வாழ்ந்து வந்த நிலத்தில், அப்பன் ஆச்சி பாட்டன் பாட்டி சுற்றி வந்த பூமியில்
கடல் மடை போல் முடுக்கிவிடப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கா?

நாவற்குழியில் புத்தர் சிலை நிறுவியதற்கா?

பவுத்தர்கள் இல்லாத இடங்களில் பவுத்த விகாரைகள், பவுத்த கோயில்கள், புத்தர் சிலைகள், இராணுவக் குடியிருப்புக்களை நிறுவியதற்கா?

மொத்தம் உள்ள 20 இராணுவப் படைப் பிரிவுகளில் 15 இராணுவப் பிரிவுகளை யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கா?

ஆயிரம் அரசியல் கைதிகளை பூசா, கொழும்பு, அனுராதபுரம், வவுனியா போன்ற சிறைகளில் ஆண்டுக்கணக்காக பூட்டி வைத்து அழகு பார்ப்பதற்குக் கைமாறாகவா?

காணாமல் போனவர்கள், காணமல் போனவர்கள்தான் அவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்ற ஆணவப் பேச்சுக்கா?

இராணுவத்திடம் சரணடைந்த எழிலன், யோகி, பாலகுமார், கவிஞர் இரத்தினதுரை, திலகர், பேபி சுப்பிரமணியன் உட்பட சுமார் 50 பேர் மே 18, 2009 இல் இராணுவத்தால் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். அதனைப் பார்த்த கண்கண்ட சாட்சிகள் இருக்கின்றன. பிடித்துப் போகப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்? எங்கிருக்கிறார்கள்? உயிரோடு இருக்கிறார்களா? இல்லை கொல்லப்பட்டார்களா?

தமிழ் வாக்காளர்கள் வயிறு எரிந்து கேட்கிறார்கள் இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

மகிந்த இராசபக்சேயின் வாயை அடைப்பதற்கு ஒரே வழி அவரது கட்சியையும் அவருக்கு காவடி தூக்கும் கொலைகார இபிடிபி கட்சியையும் தேர்தலில் தோற்கடிப்பதுதான். அதன் மூலம் ஆளும் கட்சிக்கு தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும். மானமுள்ள தமிழ் வாக்காளர்கள் இதனைச் செய்து மகிந்த இராசபக்சேயின் முகத்தில் முன்னர் போல் கரி அப்ப வேண்டும்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள் பற்றிய சிங்கள அரசின் அச்சம் பல மடங்கு அதிகரித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் இன்றைய ஆட்சியாளர்களது தூக்கத்தை கலைத்துவருகின்றன. அதனால் இந்த அமைப்புளுக்கு எதிரான பரப்புரையை சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ளது. கோடிக் கணக்கான பணத்தைப் பொதுமக்கள் தொடர்பு அமைப்புக்களுக்குக் (Pரடிடiஉ சுநடயவழைளெ கசைஅள) கொடுத்து புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான பரப்புரையை சிறீலங்கா அரசு செய்கிறது.

வி.புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களை ஆதரிக்கும் தமிழர் அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டும் அல்லது அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா இனவாத அரசு மேற்குலக நாடுகளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

ஆனால் தமிழர்கள் சிங்களவர்களோடு ஒரே நாட்டில் கூடி வாழ முடியாது என்ற நிலைமை 1983 இல் இருந்ததை விட 2013 இல் அதிகரித்துள்ளது. சிங்கத்துக்கும் புலிக்கும் இடையிலான பகை மேலும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த யதார்த்தத்தை பன்னாட்டு சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
நக்கீரன்
« PREV
NEXT »

Facebook Comments APPID