BREAKING NEWS
latest

Thursday, July 19, 2018

இராணுவத்தின் நிர்வாக செயற்பாடுகளில் தலையிடுவதில்லை! - பிரதமர் ரணில்

இராணுவத்தின் நிர்வாக செயற்பாடுகளில் ஜனாதிபதியோ அல்லது தானோ தலையிடுவதில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியொன்றை முன்வைத்த தினேஷ் குணவர்தன எம்பி, இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறினார்.

' இராணுவத் தளபதிகள் கலந்துரையாடி எடுக்கும் தீர்மானங்களுக்கு அமையவே தற்பொழுது இராணுவம் நிர்வகிக்கப்படுகிறது. விசேடமாக இராணுவத்தில் ஜெனரல் பதவிகள், மேஜர் பதவிகள் மற்றும் கேணல் பதவிகள் போதியளவு இருக்கின்றன. உயர் பதவிகளில் எந்தவிதமான குறைப்புக்களும் செய்யப்படவில்லை.

அத்துடன், முகாம்களின் எண்ணிக்கை மற்றும் அவை எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பதை இராணுவத்தினரே எமக்கு அறிவிக்க வேண்டும். அதற்கமையவே நாம் நடவடிக்கை எடுப்போம்.
இராணுவத்தில் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது அதற்கமைய ஆளணிகளில் மாற்றங்கள் செய்வது உலக நாடுகளில் முன்னெடுக்கப்படும் சாதாரண செயற்பாடாகும். நாம் பின்பற்றும் பிரித்தானிய முறைக்கு அமைய படையணியொன்றில் 600 பேர் இருக்க வேண்டும். குறைவான எண்ணிக்கையுள்ள ஆளணிகளில் உரிய எண்ணிக்கையைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் சில படையணிகள் முற்றாக இல்லாமல் செய்யப்பட்ட வரலாறும் உண்டு.

இலங்கையில் இதற்கு முன்னர் இவ்வாறு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையே இந்த நிலைமைக்குக் காரணமாகும். எமது இராணுவத்தினர் ஐ.நா அமைதிகாக்கும் படையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. தற்பொழுது மாலியில் பணியாற்ற ஹெலிகொப்டர்கள் சகிதம் எமது இராணுவத்தினர் சென்றுள்ளனர். அது மாத்திரமன்றி இந்துசமுத்திரத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையின் கடற்படைக்கு சிறந்த கேள்வி உள்ளது.

பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டடத்தை அமைப்பதற்கு பெரும் எண்ணிக்கையான பணம் செலவிடப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு செலவழிக்க வேண்டிய இந்தப் பணம் கட்டடத்துக்காக செலவிடப் பட்டுள்ளது. இது குறித்து எவரும் கதைப்பதில்லை. என்றார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆவா குழுவின் செயற்பாடு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர். ஆவா குழு என்பது பயங்கரவாதக் குழுவோ, துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொள்ளும் குழுவோ அல்ல. சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் பொலிஸாரால் கட்டுப்படுத்தக்கூடிய குழுவாகும் எனவும் பிரதமர் மேலும் கூறினார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID