BREAKING NEWS
latest

Monday, July 23, 2018

மேட்டூர் அணை நீர்மட்டம் 119.41 அடியை எட்டியது

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.

இதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 17-ந் தேதி இரவு 9 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 19-ந் தேதி, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது.

அணையில் இருந்து நீர் மின் நிலைய மதகுகள் மூலம் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட பல மடங்கு அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 116.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இரவு 8 மணி அளவில் 118 அடியாக உயர்ந்தது.

மேட்டூர் அணையில் நீர் இருப்பு 92.53 டி.எம்.சி.யாக உள்ளது.  மேட்டூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணைக்கு நீர்வரத்து 68 ஆயிரத்து 489 கனஅடியாக உள்ளது.  இதனால் அணையின் நீர்மட்டம் 118 அடியில் இருந்து 119.41 அடியாக இன்று உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டும் என கூறப்படுகிறது.
« PREV
NEXT »

Facebook Comments APPID