BREAKING NEWS
latest

Wednesday, June 27, 2018

யுத்த காலத்தில் வட மாகாண வர்த்தகர்கள் சிரமங்களை எதிர்நோக்கினர் - விக்கி

ஒரு சமூகத்தில் வர்த்தகர்களின் பங்கு என்ன என்பது பற்றி பலரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டார்கள். வர்த்தகர்கள் எனப்படுபவர்கள் கொஞ்ச முதலீட்டுடன் பொருட்களைக் கொள்வனவு செய்து இங்கே கொண்டுவந்து தமது கடைகளில் வைத்திருக்கிறார்கள், நாம் அவர்களிடம் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவர்கள் தாம் கொள்வனவு செய்த விலையுடன் தமது ஆதாயத்தையும் சேர்த்து விற்பனை செய்கின்றார்கள்.

இது மட்டுமே வர்த்தகர்களின் வகிபாகம் எனப் பலரும் எண்ணுகின்றார்கள். இது முற்றிலுந் தவறான ஒரு கருத்து என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நெல்லியடி வாணிபர் கழக அனுசரணையில் 25 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் வர்த்தக சேவையைப் பூர்த்தி செய்தவர்களையும் அவர்களுடைய சமூகப் பணிகளையும் பாராட்டி நடத்தப்படும் கௌரவிப்பு விழா இன்று யாழ் பீச் ஹோட்டல், விக்னேஸ்வரா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எமது மக்களின் மேம்பாட்டிற்கு வர்த்தகப் பெருமக்களின் பங்கு அளப்பரியது. நாட்டின் சாதாரண சூழ்நிலையில் வர்த்தகம் செய்வது ஓரளவுக்கு சுலபமானதாக இருக்கக் கூடும்.

ஆனால் அசாதாரண சூழ்நிலைகளில் அந்தந்தப் பகுதிகளில் வாழுகின்ற மக்களின் அன்றாடத் தேவைகளையும், அவர்களின் அத்தியாவசிய உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தேவையான அளவு உணவுப் பொருட்களையும், இன்னோரன்ன அத்தியாவசியப் பொருட்களையும் கையிருப்பில் வைத்திருக்கவேண்டியது வர்த்தகர்களின் கடப்பாடாக இருந்து வருகின்றது.

சில காலங்களுக்கு முன்னர் வட பகுதியில் யுத்த மேகங்கள் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பிரதேசம் ஏனைய பகுதிகளில் இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் கடல் மார்க்கத்தின் ஊடாக மட்டும் போக்குவரத்து சேவைகள் நடைபெற்றன.

அக்காலத்தில் எமது வர்த்தகர்கள் பல சிரமங்களின் மத்தியில் கப்பலின் ஊடாக பொருட்களை கொண்டுவந்து காங்கேசன்துறையில் இறக்கி, பல கெடுபிடிகளுக்கு மத்தியில் பற்பல இராணுவச் சோதனைகளை நிறைவு செய்து, எமது பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை கொண்டுவந்து மக்களுக்கு வழங்கியமை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூரற்பாலது.

இவ்வாறு பொருட்களைக் கொண்டுவந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் பொருள் நஷ்டங்களும் எண்ணிலடங்கா! தற்செயலாக ஒரு கப்பல் நீரில் மூழ்கிவிட்டால் அல்லது பொருட்கள் ஏற்றப்பட்ட பின்னர் சென்றடையவேண்டிய இடத்தை சென்றடைவதில் தாமதங்கள் ஏற்படுகின்ற போது பழுதடையக்கூடிய வெங்காயம், உள்ளி, உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் அழுகி சேதமடைவதுடன் அவை அவற்றுடன் கூட இருந்த ஏனைய பொருட்களையும் பழுதடையச் செய்துவிடுவன.

இதனால் வர்த்தகர்களுக்கு பலவாறான பொருட்சேதங்களும் மன உளைச்சல்களும் ஏற்படும். இவற்றையெல்லாந் தாங்கிக் கொண்டு பொருட்களைக் கொண்டுவந்து விற்பனை செய்யும் போது பொதுமக்களுள் சிலரின் அபிப்பிராயங்கள் அவர்களை மனம் வருத்துவனவாகவேஅமைந்தன.

இது ஒரு புறம். மறுபக்கத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும் வர்த்தகப் பெருமக்கள் பலர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு அப்பால் மேற்கொள்கின்ற சமூகப் பணிகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இடது கை கொடுப்பதை வலது கை அறியாத விதத்தில் அவர்களின் சமூகப் பணிகளுக்கான கொடுப்பனவுகள் பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஊடாக தொடர்ந்து வழங்கப்பட்டுவந்தன.

இவை சம்பந்தமாக வடமராட்சி வணிகர் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பணிகள் எமக்கு பட்டியல் இட்டு காட்டப்பட்டுள்ளன.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற ஒரு பிரபல ஃவுட் சிற்றி (Food City) நிறுவனமொன்றின் உரிமையாளருடன் எமது அலுவலர் ஒருவர் சம்பாஷிக்க நேர்ந்த போது அவர் தமது அற நிதியத்தில் இருந்து சராசரியாக வருடாந்தம் 6 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதிகளை சமூக மேம்பாட்டிற்காக வழங்கிவருவதாகத் தெரிவித்தார்.

இந்நிதி மக்களை சரியாக இனங்கண்டு தேவையானவர்களுக்கு மட்டும் பல்வேறு வடிவங்களில் வழங்கப்படுவது அவரால் உறுதிசெய்யப்பட்டது.

அது மட்டுமன்றி இந்த வருடம் தங்கள் ஒதுக்கீட்டில் இருந்து நூற்றி அறுபது வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நிலங்கள் கொள்வனவு செய்யப்பட்டுவிட்டன என்ற தகவலையும் எமது அலுவலருக்கு தெரிவித்திருந்தார்.

இவ்வாறு சமூகப் பணிகள் மூலம் வாழ்வாதார நிலையில் அடிமட்டத்தில் இருக்கக்கூடியவர்களை சற்று உயர்த்தி விடுவதற்கு இவர்களின் ஒத்துழைப்புக்களும் நிதி வழங்கல்களும் பெரிதும் உதவி வருகின்றன.

எதிர்பாராத ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுகின்ற போது அப் பகுதியின் உணவுத் தேவையை ஈடுசெய்யக்கூடிய அளவுக்கு உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் எமது முன்னணி வர்த்தகர்களின் உணவுக் களஞ்சியங்களுடன் ஒப்பிடும்போது அரச களஞ்சியங்களின் இருப்பு மிகக் குறைவானது என்றே நான் கருதுகின்றேன்.

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளிலும் கூட வர்த்தகம் பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்படுகின்றது.

வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற ஒருவர் தமக்குக் கிடைக்கின்ற ஆதாயத்தின் இன்ன விகிதத்தை நலிவுற்றோர்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும் என்றுவேதங்களிலும் திருக்குரானிலும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

வர்த்தகம் என்பது மிகப்பெரியதொரு கலை. அதனை முறையாகக் கற்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதே அந்த வர்த்தகம் சிறப்புற அமைகின்றது. இன்று பல்கலைக்கழகங்களில் வர்த்தகக் கல்வி புகட்டப்பட்டு வருகின்றது.

எனினும் எமது சிரேஷ்ட முன்னணி வர்த்தகர்களில் பலர் அனுபவ வாயிலாகத் தாம் பெற்ற வர்த்தக அறிவுகளை அடிப்படையாகக் கொண்டே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறு அனுபவ வாயிலாக பெற்றுக்கொள்கின்ற பட்டறிவுக்கும் கல்வி மூலமாக பெற்றுக்கொள்ளப்படும்அறிவுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எமது முன்னோர்கள் வர்த்தகக் கல்வியை கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் வர்த்தகத்தை முறையாக மேற்கொள்கின்ற வித்தையைக் கற்றுக்கொண்டிருந்தார்கள்.

அதனால் தான் அவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் மேம்பட்டு இருந்ததுடன் சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில் எல்லோராலும் மதிக்கப்படுபவர்களாக வாழ்ந்து மடிந்திருக்கின்றார்கள். கொழும்பில் V.T.V,A.V.S ஞானம் போன்றவர்கள் நினைவுக்கு வருகின்றார்கள். இன்றைய நவீன உலகின் அவசர நிலையில் எல்லா விடயங்களுக்கும் அவசரம்.

ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிவிட வேண்டும் என்ற அவா! இவ்வாறு பணம் ஒன்றே குறிக்கோளாக வாணிபத்தில் ஈடுபடுவோர் பலர் பல சிரமங்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

எல்லோரும் எல்லா வர்த்தகங்களிலும் ஈடுபடுவதற்குப் பதிலாக சில்லறைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அவற்றை விற்பனை செய்யவும், மோட்டார் உதிரிப்பாகங்களை விற்பனை செய்பவர்கள் அவற்றை விற்கவும், சைக்கிள் விற்பனை, மோட்டார் சைக்கிள் விற்பனை, இலத்திரனியல் பொருட்கள், அழகுப் பொருட்கள் விற்பனை என அந்தந்தப் பொருட்களின் விற்பனைகள் தனித்தனியே மேற்கொள்ளப்பட்ட போது அன்று விற்பனை சிறப்பாக இருந்தது.

இதற்கொரு சிறிய உதாரணம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி றோட் பகுதியில் அமைந்திருந்த ஒரு மோட்டார் உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் ஒரு ஊழியர் கடமையாற்றி வந்தார்.

அந்த ஊழியரிடம் சென்று மோட்டார் கார் இலக்கத்தை மட்டும் கூறினால் போதும் அதற்கு அவர் எப்போது பற்றறி மாற்றியது, இயந்திரம் எப்போது புதுப்பித்தது, மோட்டர் எப்போது மாற்றியது என அனைத்து விபரங்களையும் விலாவாரியாக எடுத்துக்கூறக்கூடியவராக இருந்தார். அன்று அவர் போன்றவர்கள் விற்பனையுடன் மட்டும் நின்றுவிடவில்லை.

மாறாக ஒவ்வொரு இயந்திரத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் இன்றோ ஒரே வகையான விற்பனைகளில் பலர் ஈடுபடுவது வர்த்தக நடவடிக்கைகளில் சற்றுக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாகத் தென்படுகின்றன.

தேவையான பொருட்களை தேவையான நேரத்தில் சில வேளைகளில் கொள்வனவு செய்ய முடியாது போய்விடுகின்றது.

முன்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி மோட்டார் உதிரிப்பாக விற்பனைக்கும் யாழ் கஸ்தூரியார் வீதி இலத்திரனியல் சாதனங்கள் மணிக்கூட்டு வகைகள் என்பனவற்றிற்கும் கே.கே.எஸ் வீதி இரும்பு வாணிபத்திற்கும் பெயர் பெற்றிருந்தன. அதாவது கடைகள் வரையறைசெய்யப்பட்டிருந்தன.

இன்று 'மல்டி ஷொப்' என்ற பெயரில் எல்லாப் பொருட்களும் எல்லாக் கடைகளிலும் எல்லா இடங்களிலும் காணப்படுவதால் சில அத்தியவசியப் பொருட்கள் தேடற்கரியனவாகி கொழும்பை நோக்கி செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இன்னொரு விடயம் வட பகுதியில் ஏற்பட்ட நீண்ட கால யுத்தம் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேர வரையறையை வகுத்துவிட்டது. விளைவு அரச பணிகளில் ஈடுபடுபவர்களும் இன்னோரன்ன பணிகளில் ஈடுபடுபவர்களும் தமது கொள்வனவுகளுக்காக சனிக்கிழமை வரை பொறுத்திருக்க வேண்டி உள்ளது.

இந்நிலை மாற்றப்பட வேண்டும். நகரப் புறங்களில் காணப்படுகின்ற வர்த்தக நிறுவனங்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆகக் குறைந்தது இரவு 9.00 மணிவரை நடாத்த முன்வரவேண்டும்.

அப்போதுதான் அந்த நகரம் துடிப்பான நகரமாக அதாவது Vibrant City ஆக மாற்றம் பெறும். இவ்வாறு நகரம் துடிப்பானதாக மாற்றப்படும் போது போக்குவரத்துச் சேவை நேரங்கள் நீடிப்புச் செய்யப்படும். திரை அரங்குககள் சிறப்பாகச் செயற்படும்.

காலப்போக்கில் வங்கிச் செயற்பாடுகளும் நீடிப்புச் செய்யப்படும்.எனவே வர்த்தக நகரங்கள் துடிப்புள்ள நகரங்களாக மாற்றப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு! இதனால் வர்த்தகர்கள் பயன்பெறுவார்கள்.

நுகர்வோரும் பொருள் கொள்வோரும் பயன் பெறுவார்கள். வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்கள் புதுப் பொலிவைப் பெறுவன.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒருவர்த்தக நடவடிக்கையைப்பற்றி எனக்குக் கூறப்பட்டது.

அதை நடத்தியவர்கள்மிகப் பழைய பாவித்த பொருட்களை வர்த்தக நடவடிக்கைக்காக தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணப் பகுதிக்கு கொண்டுவந்திருந்தார்கள். அவை அனைத்தும் பாவிக்கப்பட்ட மிகப் பழைய இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள், துவிச்சக்கர வண்டி எனப் பலவகையான பொருட்கள் எனப்பட்டன.

இவ்வாறான வர்த்தகங்கள் யாருடைய அனுமதியின் பெயரில் நடைபெறுகின்றன? வர்த்தக சங்கம் இது பற்றி அறிந்திருந்ததா போன்ற விடயங்கள் புரியாப்புதிராக காணப்படுகின்றன.

பழையனவற்றை மலிவு விலையில் எம்மீது திணிப்பதை தென்னிலங்கை வியாபாரிகள் நிறுத்த வேண்டும். எது எப்படியோ இவ்வாறான வர்த்தக நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் இடம்பெறாது தடுத்து நிறுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் மற்றும் வர்த்தக சங்கத்தினதும் பொறுப்பாகும்.

பொது மண்டபங்களும் பிரதேசசபை மண்டபங்களும் தமக்கு வருமானம் வருகின்றதென்பதற்காக தமது மண்டபங்களில்இத்தகைய வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது.

இன்றைய இந்நிகழ்விலே கௌரவிக்கப்படுகின்ற அனைத்து வர்த்தகப் பெருமக்களையும் நாமும் வாழ்த்திக் கௌரவிப்பதுடன் உங்கள் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தும் சிறப்பாக பொதுமக்களையும் வாடிக்கையாளர்களையும் கவரக்கூடிய விதத்தில் நடைபெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID